பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விடுத்துள்ள எச்சரிக்கை
தற்போதைய சூழ்நிலை தொடருமாயின் பிரித்தானியாவில் அடுத்து வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவில் தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அப்பகுதிகளில் மட்டும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில் நாடு முழுவதும் சில வாரங்களுக்கு பாடசாலைகள் மூட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வைரஸ் பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாடசாலைகள் பாதுகாப்பானவை.
அதை வலியுறுத்துவது மிகவும் முக்கியம். இளைஞர்கள், குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் மிகவும் சிறியது. ஊழியர்களுக்கு ஏற்படும் ஆபத்து மிகக்குறைவு. கல்வியின் நன்மைகள் மிகப்பெரியவை.
அடுத்த சில வாரங்களில் நாம் கடினமான காரியங்களை செய்ய வேண்டி இருக்கலாம். நான் அதனுடன் முழுமையாக சமரசம் செய்கிறேன். முழு நாடும் அதனுடன் முழுமையாக சமரசம் செய்து கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
பலவிதமான கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம் என்றார்.