வளர்ப்பு தந்தையினால் தாக்கப்பட்ட சிறுவன் பரிதாப மரணம்
காத்தான்குடி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட நாவற்குடா கிழக்கு பிர்தௌஸ் நகரில் வளர்ப்பு தந்தையினால் தாக்கப்பட்ட சிறுவன் இன்று (09) உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான சிறுவன் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வளர்ப்பு தந்தை கைது

நாவற்குடா கிழக்கு பிர்தௌஸ் நகரைச் சேர்ந்த முகம்மட் அரீப் (வயது - 11) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவனை தாக்கிய சிறுவனின் வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுவனை தாக்கியதாக வளர்ப்பு தந்தையிடம் மேற்கொண்ட விசாரணைகளில், சிறுவனை தாக்கியதை அவர் ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தேக நபரான குறித்த வளர்ப்பு தந்தையை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
குறித்த சிறுவன் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 126 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.