மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!
மட்டக்களப்பு, வெல்லாவெளியில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மட்டு வெல்லாவெளி காவல்துறை பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (03) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6ம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று மாலை எடுத்து உண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்ததையடுத்து அவரை உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதால் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட் படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |