மாவீரர் தினத்தில் பேக்கரியில் கேக் விற்ற சிறுவனும் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தில் பேக்கரி ஒன்றில் வேலை செய்யும் சிறுவன் மாவீரர் தினத்தில் கேக் விற்றான் என குற்றம்சாட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த விடயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கோவிந்தன் கருணாகரம் நாடாளுமன்றில் அம்பலப்படுத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் 10 ற்கும் மேற்பட்டவர் கைது
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பில் கடந்த வாரம் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேக் விற்ற சிறுவன்
எனக்கு தெரிந்த ஒரு சிறுவன் மட்டக்களப்பில் உள்ள பேக்கரியில் வேலை செய்கின்றார். அவர் கடந்த வாரம் கேக் ஒன்றை விற்றுள்ளார். அந்த கேக்கை வாங்கியவர் அதனை கொண்டுபோய் அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என எழுதியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக காவல்துறையினர் குறிப்பிட்ட பேக்கரிக்கு சென்று சி.சி.டிவி கமராவை ஆராய்ந்துள்ளனர். அதில் அந்த சிறுவன் கேக்கை மாத்திரம்தான் கொடுத்துள்ளார்.
அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என எழுதிக்கொடுக்கவில்லை. ஆனால், அந்த பேக்கரியில் வேலைசெய்த குற்றத்துக்காக பயங்கரவாதத்தடை சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படியே செல்லுமாக இருந்தால் இந்த நாடு அழிந்து போகும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |