சிறிலங்கா இராணுவ தளபதிகளுக்கு தடை : பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் (Sri Lanka) நடைபெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதிகளுக்கு பிரித்தானியா விதித்த தடை குறித்து தாம் திருப்தியடைவதாக பிரித்தானிய (United Kingdom) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.
2025 மே மாதம் நடைபெறும் முல்லிவாய்க்கால் படுகொலை நினைவு நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பரந்துபட்ட மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவு கூருவதற்காக இலங்கையிலும் உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் ஒன்று திரள்கின்றனர்.
கடந்தகால அட்டுழியங்கள்
பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களையும், நினைவுகூருவதில் நான் உங்களுடன் இணைந்துகொள்கின்றேன்.
அந்த அநீதிகளின் கொடுமைகளின் பாதிப்புகள் நினைவுகளுடன் வாழும் உயிர் பிழைத்தவர்கள் அன்புக்குரியவர்களுடன் உடன்நிற்கின்றோம்.
சமூகங்கள் ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வதற்கு,கடந்தகால அட்டுழியங்களை ஏற்றுக்கொள்வதும், பொறுப்புக்கூறலும் அவசியம் என்பதை நான் அறிவேன்.
இலங்கையின் புதிய அரசு
குற்றமிழைத்தவர்களை நீதியின் முன்நிறுத்தவேண்டும். என கடந்த வருடம் நான் எழுதியிருந்தேன். இதன்காரணமாக இம்முறை இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக நாங்கள் சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்க முடிந்தமை குறித்து திருப்தியடைகின்றேன்.
நீதி மற்றும் அமைதியை தொடர்ந்து பின்பற்றவேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகின்றது.
நீடித்த நல்லிணக்கம் மற்றும் ஸ்திரதன்மையை அடைவதற்கு இலங்கையின் புதிய அரசாங்கத்துடனும்,இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ள சிவில் சமூகஅமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் இணைந்து நாங்கள் ஆக்கபூர்வமாக பணியாற்றிவருகின்றோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் காலத்தில் மனித உரிமை மீறல்
2025 மார்ச் 24ஆம் தேதி, பிரித்தானிய அரசு இலங்கையின் உள்நாட்டுப் போர் காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு முக்கியர்களுக்கு பயணத் தடை மற்றும் சொத்துத் தடை உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை விதித்தது .
இந்த நடவடிக்கை, இலங்கையில் நீண்டகாலமாக நிலவிய தண்டனை இல்லாத நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் பிரித்தானிய அரசினால் எடுக்கப்பட்டது.
தடைகள் விதிக்கப்பட்டவர்கள்
01.ஷவேந்திர சில்வா : இலங்கை இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி. 2009ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற போர் நடவடிக்கைகளின் போது, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
02.வசந்த கரண்ணாகொட : முன்னாள் கடற்படை தளபதி. 2008 - 2009 காலப்பகுதியில் கடற்படை உளவுத்துறை அதிகாரிகள் 11 பேரை கடத்தி, அவர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
03.ஜகத் ஜயசூரிய : முன்னாள் இராணுவ தளபதி. அவரது கட்டுப்பாட்டில் செயல்பட்ட 'ஜோசப் முகாம்' திடலில், கைதிகள் மீது சித்திரவதை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
04.விநாயகமூர்த்தி முரளிதரன் : விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி மற்றும் பின்னர் அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட கருணா குழுவின் தலைவர். குழந்தை படைவீரர்கள் சேர்த்தல், சுரண்டல், மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
