பிரித்தானிய இளவரசியின் வருகையால் பூட்டப்பட்ட யாழ்.பொது நூலகம்: ஏமாற்றத்தில் வாசகர்கள்
பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் யாழ்ப்பாண வருகையால் யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்தது.
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி யாழ்ப்பாணத்திற்கு இன்று(11) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிரித்தானிய இளவரசியின் யாழ்.வருகையால் யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்த நிலையில் நூலக பிரதான வாயிலில் " விசேட காரணத்தினால் காலை 10. 30 மணிக்கு பூட்டப்பட்டு , பிற்பகல் 2 மணிக்கு மீள திறக்கப்படும்" என அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
விசேட காரணம்
இளவரசி உள்ளிட்ட குழுவினர் யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டமையால் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக நூலகம் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்ட போதிலும் , அறிவித்தலில் " விசேட காரணம்" என குறிப்பிட்டு இருந்தது.
இதன் காரணமாக நூலக வாசகர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக அறிய முடிகிறது. இளவரசி வருகை காரணமாக பொதுசன நூலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காவல்துறையினர், பாதுகாப்பு பிரிவு கடமையில் ஈடுபட்டனர்.
மேலும், இந்நிலையில் இளவரசி விஜயம் செய்யும் இடங்களில் பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் வலையொளி அலைவரிசை (YouTube Channel) உள்ளிட்ட நால்வருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு இளவரசி வருகைதந்துள்ள நிலையில் செய்தி சேகரிக்க சென்ற பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டமை ஊடகவியலாளர்கள் இடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |