பிரித்தானிய இளவரசியின் யாழ் விஜயம்: ஊடகவியலாளர்களுக்கு மறுக்கப்பட்ட அனுமதி
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்று(11) விஜயம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இளவரசி விஜயம் செய்யும் இடங்களில் பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் வலையொளி அலைவரிசை (YouTube Channel) உள்ளிட்ட நால்வருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு இளவரசி வருகைதரவுள்ள நிலையில் செய்தி சேகரிக்க சென்ற பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டமை ஊடகவியலாளர்கள் இடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
இலங்கையின் பிரபல ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவை சேர்ந்தவர்களுக்கும் அனுமதியளிக்கபடவில்லை.
குறித்த விடயம் தொடர்பில் பிரித்தானிய தூதரகத்தை ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது யாழ்ப்பாணத்தில் இயங்கும் அறக்கொடை நிலையம் ஒன்றின் ஊடகப் பொறுப்பாளரே நான்கு பெயரை சிபாரிசு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசியின் வட மாகாணத்துக்கான முதல் அரச பயணமாக இந்த பயணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |