இலங்கை வந்தார் பிரித்தானிய இளவரசி : சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பெருமிதம்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மகளான பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(10) இலங்கை வந்தடைந்தார்.
இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இளவரசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இளவரசி அதிபர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திக்கவுள்ளார்.
இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூடன் இன்று புதன்கிழமை லண்டனில் இருந்து கொழும்புக்கு தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அவர் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலே நாட்டை வந்தடைந்தார், இது குறித்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளத்தில்,
"அரச குடும்பத்திற்கு ஏற்ற சேவை, இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக லண்டனில் இருந்து கொழும்புக்கு தனது பயணத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி ஆன்னை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என பதிவிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.