'2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்' நவம்பர் 14இல் சமர்ப்பிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நவம்பர் 14ஆம் திகதி அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிபரும், நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க நவம்பர் 14 ஆம் திகதி மதியம், 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.
இரண்டாவது மதிப்பீட்டு மீதான விவாதம்
இதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன் இதன் மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
அத்துடன் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை மீதான விவாதம் நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் டிசம்பர் 08 ஆம் திகதி 5.00 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதற்கமைய நவம்பர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 08 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான நேரம்
வரவு - செலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப் பகுதியில் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான நேரத்தை ஒதுக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் டிசம்பர் 09ஆம் திகதி காலை 9.30 முதல் 5.30 வரையான காலப் பகுதியில் 50 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
