மாடு பால் கறக்கவில்லை என காவல் நிலையத்தில் முறையிட்ட விவசாயி - மிரண்டுபோன காவல்துறை
தனது எருமை மாடு சரியாக பால் கறக்கவில்லை என கூறி மாட்டை கையோடு அழைத்து வந்து காவல் நிலையத்தில் விவசாயி ஒருவர் புகார் அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள நயோகான் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாபுலால் ஜாதவ் (வயது 45). நேற்று (நவம்பர் 13) அங்குள்ள காவல்நிலையத்துக்கு சென்ற விவசாயி பாபுலால் ஜாதவ், தனது எருமை மாடு கடந்த சில தினங்களாகவே சரியாக பால்கறக்கவில்லை என எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தார்.
இதனால் அங்கிருந்த காவலர்கள் திகைத்துப் போனார்கள். பின்னர் அங்கிருந்து சென்ற விவசாயி பாபுலால், வீட்டுக்கு சென்று தனது எருமை மாட்டை காவல் நிலையத்துக்கு கையோடு அழைத்து வந்து, இது தான் என் எருமை மாடு, கடந்த சில தினங்களாகவே என் எருமை மாடு சரியாக பால்கறக்கவில்லை எனவே காவல்துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
எனினும் விஷயத்தை புரிந்து கொண்ட காவல்துறையினர் தங்கள் மீது நம்பிக்கை வைத்து காவல்நிலையம் வந்த விவசாயியை அங்கிருந்து அனுப்பாமல், மாட்டுக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறு இருக்கலாம் எனவே கால்நடை மருத்துவரிடம் சென்று மாட்டை காட்டுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இதனிடையே விவசாயி பாபுலால் இன்று மீண்டும் காவல்நிலையம் வந்து அதிகாரிகளை சந்தித்து தனது மாடு தற்போது பால் கறக்கிறது, என்பதால் தகுந்த ஆலோசனை வழங்கிய காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து சென்றார்.