கிளிநொச்சியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து: திட்டமிட்டசெயல் என மக்கள் விசனம்
கிளிநொச்சி (Kilinochch) பகுதியில் தனியார் பேருந்தை பின்னால் வந்த அரச பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் இன்று (06) காலை 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது திட்டமிட்டு இடம்பெற்றுள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டு முன்வைத்துள்ளனர்.
முறுகல் நிலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பயனிகளை ஏற்றுவதற்காக தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரச பேருந்து மோதியுள்ளது.
இவ்விரு பேருந்துகளும் ஒரு சில நிமிட வித்தியாசத்தில் புறப்பட்டு வருவதால் இருவருக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்படுவதாகவும் இதனால் வீதியில் போட்டியிட்டு செல்வதாகவும் பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.
குறித்த போட்டியின் காரணமாகவே திட்டமிட்டு பின்னால் வந்து தனியார் பேருந்தை அரச பேருந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் உடைந்த கண்ணாடி துண்டுகள்
விபத்து இடம்பெற்ற இடத்தில் இரு பேருந்துகளின் உடைந்த கண்ணாடி துண்டுகள் வீதியில் கிடந்ததாகவும் பாடசாலை மாணவர்கள் அதிகம் நிற்கும் இடம் அதனால் துப்பரவு செய்து செல்லுமாறு கரந்தாய் கிராம மக்களால் தெரிவிக்கப்பட்ட போது அரச பேரூந்து உத்தியோகத்தர் ஒருவர் தரக்குறைவாக மக்களிடம் பதிலளித்துள்ளதுடன் தம்மால் அதனை செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விபத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |