போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள பேருந்து சாரதிகள்!
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நடமாடும் ஆய்வக சேவையின் மூலம் பரிசோதிக்கப்பட்ட 56 பயணிகள் பேருந்து சாரதிகளில் பத்து பேர் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
போதைப்பொருளை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் பயணிகள் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களை அடையாளம் காணும் நோக்கில், கடந்த 22 ஆம் திகதி நடமாடும் ஆய்வக சேவைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, இதன் முதல் சுற்று ஆய்வுகள் கொழும்கு பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டன.
ஆரம்ப பரிசோதனை
அங்கு சாரதிகள் சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆரம்ப சிறுநீர் மாதிரி சோதனைகள், "ஐஸ்", ஹெரோயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாட்டை உறுதிப்படுத்தியதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு சோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பேருந்து சாரதிகள் சட்ட நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிசோதனை மேற்கொள்ளப்படும் வீதிகளை தவிர்ப்பதற்காக பல்வேறு தகவல் தொடர்பு முறைகளைப் பயன்படுத்தி சில சாரதிகள் ஆய்வுப் பரிசோதனைகளை தவிர்க்க முயற்சித்ததையும் அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
பேருந்து உரிமையாளர்களும் பொதுமக்களும் இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதிசெய்ய அதிக அவதானம் செலுத்தி ஆதரவளிக்க வேண்டும் என பிரதியமைச்சர் அழைப்பு விடுத்தார்.
முதலில் மேல் மாகாணத்தில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டாலும் முன்னறிவிப்பின்றி நாடு முழுவதும் நடமாடும் ஆய்வக பரிசோதனைகள் விரிவுபடுத்தப்படும் என பிரதியமைச்சர் தெரிவித்தார்.
ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |