எரிபொருள் விலை குறைப்பு : பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எரிபொருளின் விலை சடுதியாக குறைந்துள்ள போதிலும், பேருந்து கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள போவதில்லை என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஒட்டோ டீசல் விலை குறைக்கப்படாததே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டார்.
எரிபொருளின் தரம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்நாட்களில் ஒட்டோ டீசலின் தரத்தில் பிரச்சினை உள்ளது. இதனைக் கொண்டு தேவையான கிலோமீட்டர் வரை வாகனத்தை செலுத்த முடியவில்லை.
இது தொடர்பாக உரியத் தரப்பினருக்கு தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருளின் தரம் குறித்து எங்களுக்கு உறுதியளிக்கப்படவில்லை“ என குறிப்பிட்டுள்ளார்.
புதிய விலை
இதேவேளை, எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 92 ரக பெட்ரோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
மாறாக, 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.
மேலும், மண்ணெண்ணெயின் விலை லீட்டருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 257 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |