வடக்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றும் பேருந்துகளுக்கு இறுகும் பிடி : விடுக்கப்பட்ட அறிவிப்பு
வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் 'சிசுசெரிய' சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உரிய அனுமதிகளுடன் மட்டுமே பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட வேண்டும்.
பதிவு செய்யப்படாமலும் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாமலும் இவ்வாறான சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக முன்னறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை கடுமையாக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.
'சிசுசெரிய' சேவை
வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் முறையாகப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும். எனினும், உரிய அனுமதியோ அல்லது பதிவோ இன்றி, 'சிசுசெரிய' சேவையின் கீழ் இடம்பெறாமல் சில பேருந்துகள் தொடர்ந்தும் பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக நேரடியாக எச்சரிக்கைகளும் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
உடனடியாக சட்ட நடவடிக்கை
இருந்தபோதிலும், இதுவரை உரிய பதிவுகளை மேற்கொள்ளாத மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாத தரப்பினர் தொடர்ந்து பாடசாலை சேவையில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக அதிகாரசபையால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் செல்லும் பேருந்து சேவைகளை நடத்தும் அனைத்து தரப்பினரும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு அமைவாக தங்களைப் பதிவு செய்து, தேவையான தகுதிகள் மற்றும் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் கேட்டுக்கொண்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |