எழுதும் மேசையால் ஏற்பட்ட மோதல்: பாடசாலை மாணவன் மீது தாக்குதல்
பாடசாலையில் எழுதும் மேசை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பாடசாலை மாணவர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்கதல் சம்பவமானது மெல்சிறிபுர - உடம்பிட்ட பிரதேசத்தில் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.
மெல்சிறிபுர - கெந்தலவ - விகாரகம பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினரிடம் முறைப்பாடு
குறித்த மாணவன் ரிதிகம - உதம்மித மகா வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று, பாடசாலையில் தவணை பரீட்சையை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பாதுகாப்பு ஹெல்மெட் மற்றும் மூங்கில் குழாயால் தம்மை தாக்கியதாக, மாணவன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் கொகரெல்ல - முஹம்வல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தாம் அடையாளம் கண்டுள்ளதாகவும் மாணவன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர், பாடசாலையில் எழுதும் மேசை தொடர்பாக தமக்கு மற்றுமொரு மாணவனுடன் தகராறு ஏற்பட்டதாகவும், தம்முடன் தகராறு செய்த மாணவனின் நண்பர் ஒருவர் தொலைபேசியில் தன்னை அச்சுறுத்தியதாகவும் சம்பவத்தை எதிர்கொண்ட மாணவர் காவல்துறைனினரிடம் தெரிவித்துள்ளார்.
தன்னை தாக்கிய இருவரில் தன்னை அச்சுறுத்தியவரும் இருந்ததாகவும் அந்த மாணவன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |