அமைச்சரவையே நட்ட ஈடு செலுத்த வேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி
இரசாயன உரத்தை நிறுத்தி சேதன பசளை பாவனையாக மாற்றியது கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ( Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
அரச தலைவரால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை தான் இது தொடர்பில் தீர்மானம் எடுத்ததால், அமைச்சரவையே நட்டஈட்டை செலுத்த வேண்டும்.
அத்துடன், இந்த உர இறக்குமதிக்கு கைகளை உயர்த்திய அமைச்சரவையின் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்.
இரசாயன உரத்தை நிறுத்தி சேதன பசளை திட்டத்தை ஆரம்பிப்பதாகத் தெரிவித்து, மீண்டும் இரசாயன உர பாவனை தொடர்பில் கவனம் செலுத்தினாலும் இதுவரை உரம் கிடைக்காமையால் மக்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த சகல பிரச்சினைகளையும் உருவாக்கியது இந்த அரசாங்கமே. எனவே விவசாயத்துறை அமைச்சர் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலகவேண்டும்.
சீனாவின் மலக்கழிவு உரங்களை பொறமாட்டோம் எனத் தெரிவித்தார்கள். இறுதியில் அதனை இறக்குமதி செய்ய அமைச்சரவையே அனுமதி வழங்கியுள்ளது. இந்த நாட்டின் மக்களோ எதிர்க்கட்சி தலைவரோ, விவசாயிகளோ இந்த உர இறக்குமதிக்கு பொறுப்பில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.