மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான மனு விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivat Cabral)நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்நிலையில் தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு ஒன்று இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு உத்தரவொன்றை வெளியிடுமாறும் அவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறைமா அதிபருக்கு உத்தரவொன்றை வெளியிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவொன்றே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சோஹித ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் குறித்த மனுவை பரிசீலித்த போது அதற்கு முதற்கட்ட எதிர்ப்பை தெரிவித்தார்.
சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட முதற்கட்ட எதிர்ப்பை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த நீதியரசர்கள் குழாம் குறித்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர். அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக அரச தலைவர் கோட்டாபயவின் தீர்மானத்தின் படி நியமிக்கப்பட்டிருந்தார்.
அரசியலமைப்பின் 35 ஆவது சரத்தின் அடிப்படையில் குறித்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி ரீட் கட்டளை ஒன்றை வெளியிட முடியாது என அறிவித்திருந்தார்.