அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டும் - வஜிர அபேவர்தன
சர்வதேச நிகழ்ச்சி நிரல்
வெளி அழுத்தங்களுக்கு மத்தியில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனக் கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையில் தற்போது உள்ள கட்சிகளின் பகைமையை வெற்றிகரமாக கையாளக்கூடிய திறமையான தலைவர் ஒருவர் நாட்டில் இருக்கிறார்.
பொது எதிரிகளை எதிர்கொள்ளல்
இக்கட்டான காலங்களில் ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டும்.
"இந்தியர்கள் இந்தியர்களாகவும், அமெரிக்கர்கள் அமெரிக்கர்களாகவும், சீனர்கள் சீனர்களாகவும், ரஷ்யர்கள் ரஷ்யர்களாகவும் ஒன்றாக நிற்கிறார்கள்".
இதேபோன்று, இலங்கையர்களும் ஒன்றிணைந்து, தற்போது நிலவும் நெருக்கடியை தீர்க்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொது எதிரிகளை எதிர்கொள்ள பொதுமக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் இலங்கை வீழ்ச்சியடைவதை அனுமதிக்க முடியாது.
நாட்டின் அபிவிருத்தி
தற்போதைய அதிபர் உலகம் முழுவதும் நன்மதிப்பைப் பெற்றவர்.
இலங்கையர்கள் ஒன்றிணைந்து போராடினால் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும். இதனை அதிபர் ரணிலும் பல தடவைகள் கூறியுள்ளார்” என்றார்.
