பகைமையுடன் அரசியலில் ஈடுபட முடியாது - ரணிலுக்கு ஆலோசனை
ஐக்கிய தேசிய கட்சி ஒரு சுதந்திரமான சமூகத்துக்காக செயல்படுமானால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்போரை உடனடியாக விடுதலை செய்ய அதிபர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சூழலியலாளர் கலாநிதி அஜந்தா பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மொத்த வாக்குகளினால் இன்று கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதிபராக தெரிவு செய்யப்பட்டிருப்பவர் கட்சி பிரதிநிதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென அஜந்தா பெரேரா இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடை சட்ட பிரயோகம்
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பயங்கரவாதத்தில் ஈடுபடாதவர்களை தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.
இவ்வாறாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதுடன் அவர்களுடன் இணைந்து கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான சமூகத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க உருவாக்கி கொடுக்க வேண்டும்.
அவ்வாறு நடக்காத பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சி மக்கள் மத்தியில் ஒரு வேடிக்கையாக மாறி விடும்.
அரசியலில் நாமலுக்கான அங்கீகாரம்
இலங்கையின் அரசியலில் நாமல் ராஜபக்சவுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என்பதால் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அயராது பாடுபடுகிறார்.
நாமல் ராஜபக்சவுக்கு இருக்கும் அதே உரிமை ஏனைய சாதாரண மக்களுக்கும் இருக்கிறது என்பதை மகிந்த ராஜபக்சவும் ரணில் விக்ரமசிங்கவும் நினைவில் கொள்ள வேண்டும்.
எவரையும் பகைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட முடியாது. நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அனைத்து இளைஞர்களும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்” என்றார்.
