கனடாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வெளியான பேரிடியான அறிவிப்பு
கனடாவில் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஃபெடரல் அரசின் நிதி உதவி இந்த ஆண்டு ஓகஸ்ட் 30ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, இவர்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என கூறப்பட்டாலும், இது குறுகிய காலத்தில் நடைமுறைக்கு வருவது சாத்தியமற்றதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆபத்து
இது குறித்து துறைசார் நிபுணரான அடயோமா பட்டர்சன் கூறுகையில், "அனைவருக்கும் தங்கும் இடத்தை ஒரே இரவில் ஏற்பாடு செய்வது நடைமுறை அல்ல. இதனால், சிலர் தெருக்களில் அல்லது பாதுகாப்பற்ற இடங்களில் தங்க வேண்டிய கட்டாயத்தில் வீழ்வார்கள்" என கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறு பாதுகாப்பற்ற சூழலில் தங்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள் உடல்நலக்கேடு மற்றும் உயிரிழப்பிற்கும் ஆளாகக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாற்று நடவடிக்கை
தற்போது ஹோட்டல்களில் தங்கியுள்ள பலர், நிரந்தர உறைவிடம் கிடைக்கவில்லையென்ற சூழலில், இந்த முடிவால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்காக மாற்றுத் தீர்வுகளை விரைவில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
