இந்தியாவின் மிரட்டல் : கனடா தூதர்களுக்கு ஏற்பட்ட நிலை
கனடாவின் 41 தூதர்கள் மற்றும் அவர்களது 42 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இந்தியாவில் இருந்து கனடா வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய தூதரக அதிகாரிகளின் அதிகாரத்தைப் பறிப்பதாக இந்தியா விடுத்துள்ள மிரட்டலை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி நேற்று (19) தெரிவித்தார்.
இந்தியாவில் மொத்தாக உள்ள கனடா தூதரக அதிகாரிகளில் 21 பேர்களின் அதிகாரங்களைப் பறிக்க இருப்பதாகவும், ஒக்டோபர் 20ஆம் திகதி வரையில் அவகாசம் அளிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மெலனி ஜோலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தூதர்களின் பாதுகாப்பு
தற்போதைய சூழலில் 21 தூதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மட்டுமே தங்கள் தூதரக அந்தஸ்தை பராமரிக்க இந்தியா அனுமதிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே, கைது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்கும் முன்னர் கனடா தமது தூதரக அதிகாரிகளை வெளியேற்றியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவில் கனேடியர்கள் மற்றும் நமது தூதர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவலை இருப்பதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜோலி, நமது தூதரக அதிகாரிகளை பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருதரப்பு பதற்றம்
இந்தியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்திற்கு முரணானது என குறிப்பிட்டுள்ள அவர், தூதரக உறவுகள் மீதான வியன்னா ஒப்பந்தத்தை மீறும் செயல் எனவும் விமர்சித்துள்ளார்.
இது மட்டுமின்றி, இருதரப்பு பதற்றத்தை இந்தியா அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.