இஸ்ரேல் - பலஸ்தீன போரில் அதிரடியாக உள்நுழையும் உலகத்தலைவர்கள்
இஸ்ரேல் - பலஸ்தீன் இடையே 13 நாட்களைக் கடந்து போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் இந்த போரில் இருநாடுகளைத் தாண்டி சர்வதேச நாடுகளும் தமது தலையீடுகளை செலுத்தி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் ஆகியோரின் வரிசையில் இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேற்று (19) ஜெருசலேமில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நெதன்யாகு, “இது மிகப்பெரிய, நீண்ட நாட்கள் நீடிக்கும் போர்,இந்தப் போரில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து முழுஆதரவு அளிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
போர் விமான தாக்குதல்
மேலும், சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இங்கிலாந்து வழங்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் போரால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், எனினும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இஸ்ரேல் இராணுவம் முன்னெச்சரிக்கையாக செயற்பட்டு வருகிறது என்றும் இருள் சூழ்ந்த இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து ஆதரவாக இருக்கும் என்றும் இதன் பொது ரிஷி சுனக் பதிலளித்திருந்தார்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, சீனா, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் அவர்களின் பங்குக்கு காசா மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
அந்தவகையில் சுமார் 3,000 தொன் நிவாரணப் பொருட்கள், மருந்துகள் என்பவற்றை எகிப்துக்கு விமானங்களில் அனுப்பி வைத்துள்ளனர்.
இவை சுமார் 200 கனரக வாகனங்கள் மூலமாக எகிப்து-காசா எல்லைப் பகுதியான ரஃபாவில் நிறுத்தப்பட்டு உள்ளன, ஆனால் ரஃபா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதல்களால் நிவாரண பொருட்களை காசாவுக்கு கொண்டு செல்ல முடியாமல் நெருக்கடி நிலை உருவாகியிருந்தது.
போர்க்கால அடிப்படையில்
இதன்போது இருதரப்பினருக்குமிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சமரச முயற்சியால் காசா பகுதிக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல், எகிப்து இடையே உடன்பாடு எட்டப்பட்டு பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டது.
மேலும், இஸ்ரேலின் போர் விமான குண்டுவீச்சால் ரஃபா பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை எகிப்து அரசு நேற்று (19) போர்க்கால அடிப்படையில் சீரமைத்தது.
அடுத்து பலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (19) தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதன்போது இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போர் குறித்து இருவரும் விரிவாக விவாதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தள பக்கத்தில் பதிவொன்றினையும் வெளியிட்டிருந்தார்.