இன்றைய நாடாளுமன்ற அமர்வில் : இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம்
இன்றைய (20) நாடாளுமன்ற அமர்வில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிடுமாறு கோரும் சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (19) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய இன்றைய தினம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்காது முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரையும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - பலஸ்தீன மோதல்
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் பொதுவான இணக்கப்பாட்டுடன் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணைக்கு அமைய விவாதம் நடத்தப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதற்கான பிரேரணையை முன்மொழிய, ஆளும் கட்சியின் சார்பில் இது வழிமொழியப்படும் என செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
இஸ்ரேல் - பலஸ்தீன மோதலுக்கு உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க அனைத்து தரப்பினரையும் கோர வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்படவுள்ளது.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த யுத்த நிலைமை சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் வகையில் அமைந்திருப்பதுடன், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், இலட்சக்கணக்கான மக்கள் காயமடைந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை பெருமளவிலான இலங்கையர்கள் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றமை, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட விளைவுகள் ஏற்பட்டிருப்பதால் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி விவாதம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேரலை