தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டங்களை வகுக்குமா கனடா?
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் உள்ளிட்ட சகல பிரச்சினைகள் குறித்தும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
கனடாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரால் இந்த விடயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கனேடிய நாடாளுமன்றுக்கு நேற்று நேரடியாக விஜயம் செய்துள்ளனர். இதனைத் தமது முகப்புத்தகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரா. சாணக்கியன், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழைப்பின் பேரிலேயே, தாம் அங்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதன் போது, அங்கு 15 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, அடக்குமுறைகள், காணி, வளச் சுரண்டல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன், கனேடிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டங்களை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கு உரிய அழுத்தத்தை சிறிலங்கா அரசு மீது பிரயோகிக்க வேண்டும் எனவும் ஆணித்தரமான கோரிக்கைகளை தாம் முன்வைத்ததாக இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.