கனடாவில் இனப்படுகொலை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதாக பரவும் செய்தி
புதிய இணைப்பு
கனடாவின் பிரம்டன் நகரில் உள்ள சிங்கௌசி பூங்காவில் உள்ள தமிழின இன அழிப்பு நினைவுச்சின்னம் சேதப்படுத்தபட்டதான தகவல்கள் சமுக வலைத்தளங்களில் பரவியிருந்தமை தமிழின மக்களை விசனப்படுத்திய நிலையில் பிரதான நினைவு சின்னத்துக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லையென ஐபிசி தமிழுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் நினைவுச்சின்னம் உள்ள இடத்தில் பொருத்தப்பட்ட சில மின்குமிழ்கள் மட்டும் உடைக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
இந்த விடயம் தற்போது பிரம்டன் நகரக் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
உலகில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின் துன்பியல் வரலாற்றைக் கூறும் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக இந்த நினைவுச்சின்னம் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் வருவதற்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த நினைவுத் தூபியின் உருவாக்கத்துக்கு ஆரம்பம் முதலே சிறிலங்கா அரசாங்கங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் கனடாவில் வாழும் சிங்கள மக்களையும் தூண்டி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியிருந்தன.
ஆனால் இவ்வாறான எதிர்ப்புகளை முறியடித்து இந்த நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நினைவுச் சின்னத்தை தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கக்கூடாதென தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கண்டனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கனடா (Canada) - பிரம்டன் நகரில் திறந்து வைக்கப்பட்ட இனப்படுகொலை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் அதிகளவில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றது.
நினைவகம் நேற்று (27.05.2025) செவ்வாய்க்கிழமை சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகாத நிலையில், தமது முகங்களை மூடிய நிலையில் இனந்தெரியாத நபர்கள் நினைவகத்தை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
இந்த சம்பவம் குறித்து Peel பிராந்திய காவல்துறையில் முறையிடப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகிறது.
இந்நிலையில் சிசிரிவி கமராக்களின் உதவியுடன் சந்தேகநபர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கனடாவின் தமிழின அழிப்பு நினைவகத்திற்கு இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் அநுர அராசாங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
