யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளை சுற்றிப் பார்த்த கனேடிய உயர்ஸ்தானிகர்!
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவிற்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.
யாழ். பொது நூலகத்தை பார்வையிட்ட அவர் அங்குள்ள அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.
சிறிலங்காவிற்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தினை பார்வையிட்டுள்ளார். இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பில் யாழ் பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
புதிய பனைசார் உற்பத்திப் பொருட்கள்

அத்துடன் கனேடிய உயர்ஸ்தானிகர் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சிக்கூடத்தை பார்வையிட்டுள்ளார். பனை அபிவிருத்தி சபையினுடைய பனை சார் உற்பத்தி பொருட்களினையும் பார்வையிட்டார்.
மேலும், பனை அபிவிருத்தி சபையினுடைய எதிர்கால செயற்பாடுகள், புதிய பனைசார் உற்பத்திப் பொருட்களை கண்டுபிடிப்பதற்கான நிதி உதவிகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் உதவிப் பணிப்பாளர், சந்தைப்படுத்தல் முகாமையாளர், மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
அதேவேளை, வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சாள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோரையும் கனேடிய உயர்ஸ்தானிகர் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.