விமானத்தில் கைவரிசையை காட்டி கட்டுநாயக்கவில் சிக்கிய கனேடியர்!
லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இலங்கை விமானத்தில் பயணித்த அலுவலக உதவியாளரின் கைப்பையை திருடிய கனேடிய கண்க்காளர்ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றையதினம் (26) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று (27) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இந்த சந்தேகநபர் இலங்கை மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்றும் தெரியவந்துள்ளது.
திருட்டு சம்பவம்
கைது செய்யப்பட்டவர் கனடாவில் வசிக்கும் 60 வயதுடைய கணக்காளர் எனவும், கைப்பையானது, பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவருக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருடப்பட்ட கைப்பையில் பதினான்கு லட்சத்து இருபத்து மூவாயிரத்து ஐநூறு ரூபா பதிப்புள்ள 2,700 பவுண்டுகள் மற்றும் நான்கு நவீன கையடக்க தொலைப்பேசிகளும் காணப்பட்டுள்ளன.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் இலங்கை பெண்ணின் கைப்பை காணாமல் போயுள்ள நிலையில், இது குறித்து விமான ஊழியர்களுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
விசாரணை
அதனை தொடர்ந்து விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைப்பையை கண்டுப்பிடிக்க முடியாமல் போனதை தொடர்ந்து, விமானி கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் விசாரணை அதிகாரிகள் பயணிகளையும் அவர்களது பயணப் பொதிகளையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதன்போது, காணாமல் போன கைப்பை சந்தேகநபரான கனேடிய கணக்காளரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சந்தேகபர் பையில் இருந்த பணத்தில் ஆறு விஸ்கி போத்தல்கள் மற்றும் மூன்று வாசனை திரவியங்களை கொள்வனவு செய்ய பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |