சம்பந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்திய கர்தினால் மல்கம் ரஞ்சித்
மறைந்த தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை(Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின்(R.Sampanthan) புகழுடலுக்கு கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ( Malcolm Ranjith) அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கொழும்பு - பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் இன்று(3) தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், “தமிழர்களின் தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண மறைந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் போராடியதை போல ஏனைய அரசியல் தலைவர்களும் போராட வேண்டுமென கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
புகழுடலுக்கு அஞ்சலி
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவர் இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட தேசிய பிரச்சனையின் போது சிறப்பாக செயல்பட்ட ஒரு நபர்.
யுத்தத்துடனான கடுமையான காலத்தில் அவர் சரிவர செயல்பட்டார். அவரை போன்று ஏனைய அரசியல் தலைவர்களும் செயல்பட வேண்டும். தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணும் செயல்முறையை முன்னெடுக்க வேண்டும்.
இனவாதம்
இலங்கையில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியது எம் அனைவரினதும் கடமை. இனவாதம் மற்றும் மதவாதத்தை விதைத்து மக்களை பிரிக்காமல், நாட்டை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒண்றினைந்து செயல்பட வேண்டும்.
பொருளாதார ரீதியில் மாத்திரமின்றி சமூகமாகவும் இலங்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.” என தெரிவித்தார்.
சம்பந்தனின் புகழுடலுக்கு எதிர்வரும் (07.07.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருகோணமலை இந்துமயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



