அரசியல் கைதிகளை ஒழித்துக் கட்டலாம் - லொஹானுக்கு கோட்டாபய கொடுத்த அதிகாரம்; அம்பலப்படுத்திய சிரேஸ்ட சட்டத்தரணி
லொஹான் ரத்வத்தே நீதி மன்றத்தை அவமதிக்கும் விதமாக செயற்பட்டுள்ளதாகவும் இலங்கையின் குற்றவியல் சட்டத்தின்படி பாரிய குற்றசெயலில் ஈடுபட்டுள்ளதாகவும் சிரேஸ்ட சட்டத்தரணி K.S.இரத்தினவேல் சமர்பணம் மேற்கொண்டிருந்தார்.
இன்றைய தினம் புதன்கிழமை மன்னார் மேல் நீதி மன்றத்தில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அரசியல் கைதி தொடர்பான வழக்கின் போதே அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.
மன்னார் மேல் நீதிமன்றத்தில் சிவசுப்பரமணியம் தில்லைராஜா என்ற அரசியல் கைதியின் வழக்கு விசாரணைக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கில் பிரதான வழக்கை விட மேலதிக சமர்பணம் மேற்கொண்ட பின்னர் சிரேஸ்ர சட்டத்தரணி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அந்த பிரதான வழக்கை விட மேலும் ஒரு விடயத்தை விண்ணப்பம் செய்வதற்கு நான் அனுமதி கோரினேன். அதன் பிரகாரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவசுப்ரமணியம் தில்லைராஜா என்பவர் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் இருக்கின்றார்.
அதுமட்டுமன்றி அவரையும் சேர்த்து 14 ஆண் சிறைக் கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வடக்கு கிழக்கு மலையகத்தை சேர்ந்த தமிழ் குடிமகன்கள் இதை தவிர நான்கு அல்லது ஐந்து பெண் கைதிகளும் உள்ளனர்.
செப்டம்பர் 12ஆம் திகதி ஒரு சம்பவம் சிறைச்சாலையில் நடந்துள்ளது சிறைச்சாலை சீர்திருத்தத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை என்பவர் அந்த சிறைச்சாலைக்குள் ஆறு மணி அளவில் அத்துமீறி புகுந்து அந்த சிறைச்சாலை அதிகாரிகளை தனது அதிகாரத்திற்கு உட்படுத்தி அவர்களை பலவந்தப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் சிறைக்கைதிகளை வெளியில் கொண்டு வரும்படி ஆணையிட்டுள்ளார்.
அவரது உத்தரவுக்கு அடிபணிந்த சிறைச்சாலை அதிகாரிகளும் பத்து கைதிகளை வெளியில் கொண்டுவந்து அந்த முற்றத்தில் நிறுத்தி இருக்கிறார்கள். இந்த தருணத்தில் அந்த இராஜாங்க அமைச்சர் குடிபோதையில் இருந்ததாக அதனை அவதானித்த சிறைக்கைதிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர்களை இராஜாங்க அமைச்சர் ஆபாச வார்த்தைகளால் பேசி அதன் பின்னர் அவர்களை முழந்தாழ் இட கட்டாயப்படுத்தியுள்ளார். பயத்தின் நிமித்தம் தமிழ் அரசியல் கைதிகளும் முழந்தாழிட்டிருக்கின்றார்கள். அத்துடன் ஒவ்வொருவராக அமைச்சர் அழைத்து நீ இராணுவத்தினரை கொலை செய்தாயா என்று அச்சுறுத்தும் விதமாக கேட்டிருக்கின்றார்.
அதே நேரம் இன்றைய இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லைராஜா என்பவரையும் கூப்பிட்டு நீ யாரை கொலை செய்தாய் என கேட்டிருக்கின்றார். அவர் முதலில் எனக்கு சிங்களம் தெரியாது என்று கூறிய நிலையில் பிறகு ஒரு மொழிபெயர்ப்பாளரை கூப்பிட்டு மொழிபெயர்த்து சொல்லப்பட்டது.
அப்போது குறித்த அரசியல் கைதி நான் கொலை ஒன்றும் செய்யவில்லை எனவும் எனக்கு ஒரு வழக்கு மன்னார் நீதிமன்றில் நடைபெறுகின்றது என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவரை தகாத வார்த்தைகளால் பேசி விட்டு இன்னும் பல கைதிகளை அச்சுறுத்தியுள்ளார். அத்துடன் இன்னொரு அரசியல் கைதியை அழைத்து அவருடைய தலையில் துப்பாக்கியை வைத்து உயிர் அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார்.
மேலும் எல்லா தமிழ் அரசியல் சிறை கைதிகளிடமும் நீங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஜெனிவாவுக்கும் முறைப்பாடுகளை அனுப்பியிருக்கிறீர்கள் ஆனாலும் ஒன்றும் நடக்காது நடக்க விடமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி தனக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் போது நீ தமிழ் அரசியல் கைதிகளை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் விடுதலை செய்யவும் முடியும், அல்லது அவர்களை ஒழித்துக் கட்டவும் முடியும் அதற்கான அதிகரித்தை தருகிறேன் என்று சொல்லித்தான் எனக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே உங்களை நான் எதுவும் செய்யலாம் நீங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு முறைப்பாடு செய்ய கூடாது என்றெல்லாம் சொல்லி கடைசியில் அந்த துவக்கை தலையில் வைத்த பொழுது சிறைச்சாலை அதிகாரிகள் தலையிட்டு அவரை சமாதானப்படுத்தி வெளியே கொண்டு போயிருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் இன்றை தினம் இத்தகைய சம்பவத்தை மன்னார் மேல் நீதிமன்றத்தில் கூறி சமர்ப்பணம் மேற்கொண்டதாகவும் சிரேஸ்ர சட்டத்தரணி இரத்தினவேல் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான செயற்பாட்டின் மூலம் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்குள்ளாகின்றார் எனவும் சமர்பணத்தில் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார். ஏனென்றால் சிறை கைதிகள் யாவரும் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரிலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தண்டனை பெற்றவர்கள் கூட நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமையவே தண்டனை பெற்று இருக்கிறார்கள். சிறைச்சாலையில் உள்ள அனைவரும் நீதிமன்றத்தின் கட்டளைக்கு உட்பட்டு தான் இருக்கிறார்கள். எனவே நீதிமன்றம் தான் அந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கும் அவர்களுடைய பாதுகாப்புக்கும் பொறுப்பானவர்கள்.
சிறைச்சாலை ஒரு அரசாங்க ஸ்தாபனமாக இருந்தாலும் அரசாங்கத்தை போன்று சிறைக்கைதிகளை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் அதற்கு பொறுப்பாக இருக்கிறது.
எனவே இத்தகைய சிறைக்கைதிகளை யாராவது துன்புறுத்தினாலோ அச்சுறுத்தினாலோ வேறு எந்த வகையில் சித்திரவதைக்கு உட்படுத்தினாலும் அவர்கள் நீதிமன்றத்தின் அதிகாரத்தை சவாலுக்கு உள்ளாக்குகின்றார்கள் நீதிமன்றத்தை அவமதிக்கின்றார்கள் என்ற அடிப்படையில் இந்த விடயத்தை நீதிமன்றம் கையாள வேண்டும். எனவும் சமர்பணத்தை மேற்கொண்டுள்ளார்.
மேலும் இந்த விடயம் பற்றி ஒரு விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை ஒன்றையும் சமர்பணத்தின் ஊடாக கோரியதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இராஜங்க அமைச்சர் அது மட்டுமல்ல இலங்கையின் குற்றவியல் சட்டங்களின் படி ஒரு பாரிய குற்றத்தை இழைத்திருக்கின்றார்.
துப்பாக்கியை தலையில் வைத்ததன் மூலம் ஒருவரை கொலை செய்ய எத்தனித்தமை என்ற குற்றமும் அவர் மீது சாட்டப்படலாம் ஒரு சாதாரண குடிமகன் இந்த விடயத்தை செய்திருந்தால் அவர் உடனடியாகவே கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.
ஆனால் இவர் ஒரு அதிகாரம் படைத்த ஒரு அரசியல்வாதி அமைச்சர் என்றபடியினால் சிறைச்சாலை அதிகாரிகள் கூட அவருக்கு எதிராக அவர் செய்த செயற்பாட்டிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கா முடியாமல் போனதாகவும் அந்த சம்பவத்தை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் நீதிமன்றத்திற்கு அத்தகைய அதிகாரம் இருக்கிறது. இந்த விடயத்தில் சாதாரண சட்டங்களை மீறினால் உண்மையில் காவல்துறை திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் தான் உடனடியாக அவரை கைது செய்து குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்.
ஆனால் தற்போது இந்த மேல் நீதிமன்றம் உடனடியாக செய்ய வேண்டிய விடயம் என்னவென்றால் இத்தகைய ஒரு நபர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இத்தகைய செயல்களைச் செய்த படியால் அந்த விடயத்தில் உண்மைத் தன்மையை அறிவதற்காக தகுந்த விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதே நேரம் சிறைச்சாலை அதிகாரிகள் இந்த நீதிமன்றத்திற்கு சட்டரீதியாக அழைக்கப்படவேண்டும் என்பதுடன் இந்த நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படு குற்றம் சாட்டப்பட்டவருடைய சாட்சியமும் பதிவாக்கப்பட வேண்டும் எனவும் சமர்பணத்தில் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ததை அடுத்து மேல் நீதிமன்ற நீதவான் சிறைச்சாலை அத்தியட்சகர் நாயகம் அவருக்கு ஒரு அறிவித்தல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெற்ற விடயம் சம்பந்தமாக விசாரித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து நீதவான் நீதிமன்ற நீதிபதி கட்டளை வழங்கி இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
அதே நேரம் நவம்பர் 30ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் எடுக்கப்படும் பொழுது அந்த சிறைச்சாலை அத்தியட்சகர் நாயகத்தின் அந்த அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் அத்துடன் எந்த ஒரு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறைச்சாலைக்கு செல்வதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
சிறைச்சாலைகள் சட்டத்தின் மூலம் அதிகாலை ஐந்தரை மணியில் இருந்து மாலை ஐந்தரை மணி வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் குறித்த அமைச்சர் சென்றது 6 மணிக்குப் பிறகு அந்த சிறைசாலை இடாப்பு எடுக்கப்பட்டு அவர்கள் உள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அமைச்சர் சென்று அவர்களை வெளியில் எடுத்து அவர்களை அச்சுறுத்தியது ஒரு மாபெரும் குற்றம் பாரதூரமான குற்றமாகக் கருதப்பட வேண்டும்.
தற்போது உள்ள நிலையில் இவர் அநுராதபுர சிறைச்சாலைக்கு வந்துள்ளார் பொரலைக்கு வந்திருக்கின்றார் வேறு எந்த சிறை சாலையிலும் இவர் மட்டுமல்ல எந்த அதிகாரம் படைத்த நபரும் செல்லக்கூடிய நிலமை காணப்ப்டுவதால் நீதிமன்றம் நிச்சயமாக இந்த விடயத்தை பாரதூரமான விடயமாக கையாண்டு தகுந்த விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் பிரத்யேகமாக இந்த சிறை கைதிகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு நீதிமன்றம் அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளையிட்டிருக்கின்றது. மேலும் நீதி அமைச்சர் அலி சப்ரி சமீபத்தில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து அங்கிருந்து வெளியேறும் போது ஊடகத்துறையினருக்கு கருத்து தெரிவித்த போது, தான் தமிழ் அரசியல் கைதிகளை நேரடியாக சந்தித்து பேசியதாகவும் அவர்கள் எந்தவித அச்சுறுத்தலும் தங்களுக்கு இருக்கவில்லை என்று சொன்னதாகவும் கூறியிருந்தார்.
இது ஒரு அப்பட்டமான பொய் என்றே நான் கூற வேண்டும் ஏன் என்றால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த மாதிரி இருக்கிறது. அந்த அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்கள் தங்களுடைய பாதிப்பு பற்றி உயர்நீதிமன்றத்திற்கு தகுந்த ஆவணங்களை அளித்து இருக்கிறார்கள். சத்தியக் கடதாசி அளித்திருக்கிறார்கள்.
ஒரு மனித உரிமை அடிப்படை வழக்குகள் போட வேண்டும் என்பதற்காக இத்தகைய சம்பவத்தை இப்படி நடந்தது துப்பாக்கி முனையில் தாங்கள் அச்சுறுத்தப்பட்டார்கள் என்பதையெல்லாம் விபரமாக எழுதி ஒரு சத்தியக் கடதாசி அனுப்பியிருக்கின்றார்கள். எனவே அது நீதிமன்றத்தில் அளித்த ஒரு சாட்சியம் போன்றது.
அவர்களுடைய அந்த சாட்சியத்தை மீறி நீதி அமைச்சர் இவ்வாறு கூறுவது மிகவும் ஒரு போலியான ஒரு விடயத்தை வெளியில் கூறியிருக்கிறார். அதுவும் ஒரு நீதிமன்றம் சம்மந்தப்பட்ட விடயம் அதை இவ்வாறு அப்பட்டமான பொய்களால் மொழுகுவது என்னுடைய கருத்தின்படி லொஹான் ரத்வத்தே என்ற அமைச்சர் செய்த அதே தவறை அலி சப்ரி செய்கிறார் என்பதையும் நான் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
அத்துடன் இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்த அரசியல் கைதியின் கருத்தின் படியும் சம்பவம் நிச்சயமாக நிகழ்ந்திருக்கிறது. அவர் இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க தயாராக இருந்திருக்கிறார். ஆனால் நீதிமன்றம் முதலில் அந்த சிறைச்சாலை நாயகத்திடம் இருந்து அறிக்கை பெற்ற பின்னர் அவருடைய சாட்சியத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைக் கொண்டு இருக்கிறது.
எனவே அரசியல்வாதிகள் இந்த விடயத்திலும் தலையிடாமல் ஒரு சரியான விடயத்தை அதுவும் நீதி அமைச்சர் என்ற பதவியில் இருப்பவர், தான்தோன்றித்தனமாக அரசாங்கத்தை சார்ந்தவர்களை காப்பாற்றுவதற்காக செயற்பட கூடது எனவும் யார் குற்றம் இழைத்திருந்தாலும் அது அரசியல்வாதியாக இருந்தாலும் சரி அதிகாரிகளாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.