வேலணை மக்களிடம் இரவு நேரம் சிக்கிய கால்நடை திருட்டு கும்பல்
நீண்ட காலமாக யாழ்ப்பாணம் தீவக பகுதியில் திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழுவொன்று வேலணையில் மக்களது முயற்சியால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் வேலணை 6 ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணி பகுதியில் நேற்று இரவு (16.04.2025) 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருட்டுத்தனமாக பிடிக்கப்பட்ட ஆடுகள்
வேலணை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் திருட்டுத்தனமாக பிடிக்கப்பட்ட ஆடுகள் ஒருதொகுதி, வேலணை 6 ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணி பகுதியிலுள்ள குறித்த திருட்டுக் கும்பலின் சந்தேக நபராக கருதப்படும் ஒருவரது வீட்டில் மறைத்து கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த ஆடுகளை வெளியூரைச் சேர்ந்த சிலரின் ஒத்துழைப்புடன் நேற்று இரவு மகேந்திரா வாகனம் மூலமாக யாழ்ப்பாணத்துக்கு சட்டவிரோதமாக கடத்திச் செல்லும் முயற்சியில் குறித்த குழு இறங்கியுள்ளது.
திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் முயற்சி
இதன்படி இந்த திருட்டுக் குழு நேற்று இரவு 8 மணியளவில் 6 ஆடுகளை வாகனத்தில் ஏற்றும் சந்தர்ப்பத்தில் அதை சிலர் கண்டு சந்தேகித்து சம்பவம் தொடர்பில் ஊரிலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததுடன் அந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற ஆடுகளை பறிகொடுத்த உரிமையாளர்கள் குறித்த இடத்துக்கு வந்திருந்த நிலையில் அங்கிருந்த மக்களது ஒத்துழைப்புடன் களவாக பிடிக்கப்பட்டு கடத்திச் செல்ல வாகனத்தில் ஏற்றப்பட்ட 6 ஆடுகள், மகேந்திரா வாகனம், மற்றும் இரண்டு சந்தேக நபர்களையும் பிடித்துள்ளனர்.
ஒருவர் தப்பியோட்டம்
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த ஒருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் பிடிபட்ட இருவரையும் பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தீவக பகுதியில் கட்டாக்காலி கால்நடைகள், வளர்ப்பு கால்நடைகள் என நாளாந்தம் பல கால்நடைகள் களவாடப்படுவதும் இறைச்சிக்காக கொல்லப்படுவதுமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நிலையில் அது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர், துறைசார் தரபினருக்கு முறையிட்டும் கூட அத்திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மக்கள் மத்தியில் பெரும் கோபாவேசம் கொப்பளித்தது.
இந்நிலையில் நேற்றையதினம் வேலணை பொதுமக்களாகிய தாம் ஒன்றிணைந்து திட்டமிட்டு திருடும் திருட்டு குழுவை சேர்ந்த இருவரை கையும் களவுமாக பிடித்துள்ளமையானது மக்கள் மத்தியில் திருட்டு சம்பவங்களுக்கு தீர்வை எட்டமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
இதனிடையே பிடிபட்டஇரு சந்தேக நபர்களுடன் 6 ஆடுகள் மற்றும் மகேந்திரா வாகனமும் ஊர்காவற்றுறை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதாகவும், சந்தேக நபர்களுடன் சான்றுப் பொருட்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


