கையில் மூன்று வெட்டுக் காயங்கள் - நிதி அமைச்சு அதிகாரியின் மரணம் - வெளியான அறிக்கை
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ச தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் சம்பவித்த மரணத்திற்கான காரணம் தவறான முடிவெடுத்தமையே என மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட சட்ட மருத்துவ நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ச கடந்த 30ஆம் திகதி தனது வீட்டுத்தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
விசாரணை
அவரது கால் மற்றும் கையில் மூன்று வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இது தவறான முடிவெடுத்தமையா அல்லது கொலையா என்பது குறித்து காவல்துறை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

சந்தேகத்திற்கிடமான இந்த மரணம் குறித்த மரணப் பரிசோதனைக்காக நான்கு சட்ட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இது தொடர்பான நீதவான் விசாரணை நேற்று முன்தினம் (30) இடம்பெற்றதுடன், உடற்கூறு பரிசோதனை நேற்று (01) பிற்பகல் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
அதன்படி, தவறான முடிவெடுத்து அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களால் குறித்த மரணம் ஏற்பட்டது என்று விசாரணைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |