இன மோதல்களை உருவாக்குவது அரச திணைக்களங்களே - பகிரங்கமாக கூறிய வியாழேந்திரன்
வன வள திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியனவே வடக்கு கிழக்கில் இன மோதல்கள் உருவாவதற்கு காரணம் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறித்த தரப்பினர் கொழும்பிலிருந்து கட்டளைகளை நிறைவேற்றுவதனாலேயே மோதல் போக்கு ஏற்படுவதாக அவர் கூறினார்.
முரண் நிலை

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பிரதேசத்தில் உள்ள சோதையன் கட்டு பகுதியில் கிரவல் எனப்படும் சரளைக்கல் அகழ்வில் ஈடுபட்ட சட்டவிரோத குழுவுக்கும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும் இடையில் இன்று மோதல் ஏற்பட்டது.
சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவில் இருந்த ஒருவரை வியாழேந்திரன் கோபத்துடன் தள்ளியதால் அங்கு பதற்றம் நிலவியிருந்தது.
இந்த முறுகல் நிலையை அடுத்து சட்டவிரோத சரளைக்கல் அகழும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
இதன் பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தான் ஆளும் தரப்புக்கோ எதிர் தரப்புக்கோ ஆதரவு கிடையாது எனவும் - மக்களுக்கே தான் ஆதரவு எனவும் குறிப்பிட்டிருந்தார்.