வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள மத்திய மாகாண சுகாதார தொழிற்சங்கங்கள்
மத்திய மாகாணத்தில் (Central Province) உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (13) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து குறித்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளன.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவு தங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தது.
பல்வேறு மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படும்
இந்த நிலையில் குறித்த வேலைநிறுத்தப் போராட்டம் நாளுக்கு நாள் பல்வேறு மாகாணங்களை உள்ளடக்கியதாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி மே 14 ஆம் திகதி சப்ரகமுவ மாகாணம், மே 15 வடமேல் மாகாணம், மே 16 தென் மாகாணம், மே 20 ஊவா மாகாணம், மே 21 மேல் மாகாணம் போன்றவற்றில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பினைக் கருத்திற்கொண்டு, நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பதிலாக, மாகாண ரீதியாக அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களை கடமையில் இருந்து வெளியேறும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |