திருகோணமலையில் போராட்டத்தில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்
இலங்கை மின்சார சபையில் கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் இடமாற்ற சபையின் தீர்மானங்களுக்கு எதிராக திருகோணமலை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று(15) நண்பகல் 12 மணிக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து வருட காலங்களுக்கும் அதிகமாக பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கடமை புரிந்து வருவதாகவும் அவர்களுக்கான இடமாற்றங்களை கோரிய போதிலும் அதற்கான தகுந்த பதில் தமக்கு கிடைக்கப்பெறவில்லையென்பதாலும் இப்போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
போராட்டம்
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிங்கள சமூகத்தினரை தவிர்ந்த வேறு எவரும் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த 159 பொறியியலாளர்கள் இரண்டு வருடங்களுக்குள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் 105 பொறியியலாளர்கள் தமது சேவையை விட்டு விலகியுள்ளதுடன் மேலும் 54 பேர் உத்தியோகபூர்வ விடுமுறை பெற்று சென்றுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மின்சார சபை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நிர்வாக சபையில் பணிபுரிந்து மிகவும் சிக்கலான கடமைகளில் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் தமது பணியை மேலும் துறந்தால் இலங்கை மின்சார சபை கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.
விடுமுறையில் வெளிநாட்டில் இருக்கும் ஏராளமான பொறியியலாளர்கள் தங்களுடைய நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் பெறுவதற்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அதன் காரணமாக அவர்கள் மீண்டும் பணிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் ஒரு புதிய பொறியியலாளர் மாதம் சுமார் 4,000 டொலர்கள் சம்பளம் பெறுவதாகவும் மற்றும் அனுபவம் வாய்ந்த பொறியியலாளர் சில நாடுகளில் மாதம் 6,000 முதல் 8,000 டொலர்கள் வரை சம்பளம் பெறலாம்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |