அரச ஊழியர்களுக்கு விழுந்த பேரிடியை தகர்த்த ரணில்! அதிகரிக்கப்படும் கொடுப்பனவுகள்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையில் விஷேட வழிமுறைகளை உருவாக்கி அரச ஊழியர்களை குறைக்காமல், வரவு செலவு திட்டத்தில் அவர்களுக்கு கொடுப்பனவை அதிகரித்துக் கொடுத்தோம் என உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை மக்கள் பாவனைக்காக திறந்துவைத்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''எமது நாடு பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை எதிர்நோக்கிய போதுதான் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பெடுத்தார்.
அரச ஊழியர்கள் குறைப்பு
இதன்போது அரச ஊழியர்களை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் அரச ஊழியர்கள் அச்சமடைந்தனர்.
ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையில் விஷேட வழிமுறைகளை உருவாக்கி அரச ஊழியர்களை குறைக்காமல், வரவு செலவு திட்டத்தில் அவர்களுக்கு கொடுப்பனவை அதிகரித்துக் கொடுத்தோம்.
நேற்று முன்தினம் ரணிலுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அரச ஊழியர்களுக்கு விஷேட கொடுப்பனவு ஒன்றை வழங்க முடிவு எட்டப்பட்டுள்ளது.
இப்போது நாட்டில் மாகாண சபை உறுப்பினர்கள் இல்லாமல் மாகாண ஆளுநர்களின் தலைமையில் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிராம சேவையாளர் பற்றாக்குறை
மாகாண ஆளுநர்களின் மேற்பார்வையில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக கிராமங்களுக்கான பணிகளை முன்னெடுக்க மாவட்டச் செயலாளர்களும், பிரதேச செயலாளர்களும் அவர்களுக்கு கீழ் பணியாற்றி வரும் அரச ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
எமது நாட்டில் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவையாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகிறது. அவற்றை நிவர்த்திக்க நாம் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.
இந்த மாதத்திற்குள் கிராம சேவகர் போட்டிப் பரீட்சையில் சித்திபெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு இடம்பெறும் அதன் பின்னர், பற்றாக்குறையாக உள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் புதிதாக கிராம சேவகர்களை நியமிக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது."என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |