சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் : காரணத்தை வெளியிட்ட மகிந்தானந்த அளுத்கமகே
இலஞ்சம் பெற்றுக் கொண்டு நாடாளுமன்ற பதவியிலிருந்து சமிந்த விஜேசிறி விலகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்படி, 90 மில்லியன் ரூபாவை அவர் இலஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளார் என மகிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
பதவி விலகல்
நாடாளுமன்றத்தின் ஒரு சில உறுப்பினர்கள் செயல்படும் விதத்தை அடிப்படையாக கொண்டு, அனைத்து உறுப்பினர்கள் மீதும் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் காரணமாக தாம் பதவி விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி நேற்றைய தினம் அறிவித்தார்.
அத்துடன், ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் தவறான நடவடிக்கைகள் காரணமாக தமது பிள்ளைகளும் சபிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்திலுள்ள ஏனைய உறுப்பினர்களின் பிள்ளைகளும் பாடசாலைகளுக்கு செல்வதாக மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளதுடன், அவர்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலஞ்சம்
இந்த நிலையில், அவர் 90 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளதாகவும், தற்போது குடும்பத்துடன் அவர் அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சமிந்த விஜேசிறி இரட்டை குடியுரிமையை கொண்டவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இவ்வாறாக இரட்டை குடியுரிமையை கொண்ட உறுப்பினர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவது தற்போது பிரச்சினையாக மாறியுள்ளதெனவும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் மகிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |