சம்பிக்கவிற்கு ஒருபோதும் வழங்க முடியாது - பிடிவாதத்தில் அரசாங்கம்
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரதியை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விடுத்த கோரிக்கையை நிதியமைச்சு நிராகரித்துள்ளது.
இது மக்களின் தகவல் அறியும் உரிமையை அப்பட்டமாக மீறுவதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தின் நகலை எழுத்துப்பூர்வமாக வழங்க நிதியமைச்சின் அதிகாரிகள் மறுத்துவிட்டதாக எம்.பி குறிப்பிட்டார். மக்கள் பிரதிநிதிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் இந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்துகொள்ள உரிமை உண்டு என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலமுறை தெரிவித்தும் ஒப்பந்தத்தில் உள்ளவற்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வலியுறுத்தியும் இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதேவேளை, இந்த உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு கூட போதிய தகவல் வழங்கப்படவில்லை என அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் தெரிவித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.