ஐந்து வருடங்களின் பின்னர் சுதந்திரக்கட்சி தலைமையகத்திற்கு வந்த சந்திரிக்கா
முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Bandaranaike Kumaratunga)ஐந்து வருடங்களின் பின்னர் இன்று (06) மாலை கொழும்பு டீ.பீ.ஜயா மாவத்தையில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
இவருடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva) மற்றும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் வந்திருந்தனர்.
இந்தக் குழுவில் அமைச்சர் மகிந்த அமரவீர(Mahinda Amaraweera), இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன(Lasantha Alagiyawanna) மற்றும் கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) ஆகியோர் அடங்குவர்.
கட்சியின் முக்கியஸ்தர்களுடன் விசேட கலந்துரையாடலை
தலைமையகத்திலிருந்து வெளியேறும் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கட்சியின் முக்கியஸ்தர்களுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டதாக முன்னாள் அதிபர் தெரிவித்தார்.
பிரிந்து சென்ற மைத்திரி
அங்கு அவர் மேலும் கூறுகையில், தான் எப்போதும் கட்சியில் இருப்பதாகவும் ஆனால் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தன்னை விட்டு பிரிந்து சென்றதாகவும் அதன் பின்னர் தலைமையகத்திற்கு வரவில்லை எனவும் தெரிவித்தார்.
கட்சியின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணிப்பேன் என்று கூறிய அவர், நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |