பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் : அதிபர் ரணில் சுட்டிக்காட்டு
இலங்கையில் பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று (25) இடம்பெற்ற “2024 பாடசாலை உணவுத் திட்டம்” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க “தற்போது நாட்டில் நவீன கல்வி முறையை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். 2024 ஆம் ஆண்டுக்கு மாத்திரமன்றி 2030 ஆம் ஆண்டுக்கும் உகந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு
அந்தப் பணிகளை இப்போது செய்து வருகிறோம். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குதல் போன்ற திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஒவ்வொரு பாடசாலையிலும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை செயற்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு சங்கங்கள் தொடங்கப்பட வேண்டும்.
மேலும், தேசிய செயற்கை நுண்ணறிவு மையம் சட்டப்படி நிறுவப்பட உள்ளது. இந்த ஆராய்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என்பதைக் கூற வேண்டும்.
கல்வி மற்றும் பரீட்சை முறையில் மாற்றம்
அதன்படி, அடுத்த சில ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை ஆரம்பப் பாடசாலைகள் மட்டுமன்றி, உயர்கல்வி கற்பிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேற வேண்டும். அந்த தொழில்நுட்ப அறிவை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். அதன்படி, பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்த நவீன தொழில்நுட்ப அறிவோடு பிள்ளைகளின் ஆங்கில மொழி அறிவையும் வளர்க்க வேண்டும். அதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளோம்“ என அதிபர் ரணில் விக்ரமசிங்க இங்கு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |