யார் அந்த அதிகாரிகள் :இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் புதிய அரசாங்கத்துடன் கல்வி சீர்திருத்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த இரண்டு அதிகாரிகளும் தகுதிகளை பூர்த்தி செய்யாமல் நியமிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அடுத்து, முறையான குழுவினால் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இரு அதிகாரிகளையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும்
அதன்படி, கணக்காய்வு பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த இரு அதிகாரிகளையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும், இல்லையெனில் கல்வி சீர்திருத்த விவாதமே கேலிக்கூத்து என ஸ்டாலின் (Joseph Stalin)கூறியுள்ளார்.
கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் தலைமையிலான குழு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஆராய்ந்ததாகவும், அவர்கள் மீது உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் வட்டமேசை கலந்துரையாடல்
அதுமட்டுமின்றி, இந்த அதிகாரிகள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபர் கல்வி அமைச்சிடம் ஆலோசனை கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்த இரண்டு அதிகாரிகளும் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன்(Harini Amarasuriya) வட்டமேசை கலந்துரையாடலில் பங்குபற்றுவது நகைப்புக்குரியது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |