வெளிநாட்டவர்களை ஈர்க்க இந்தியாவின் விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்
விசா வழங்கும் நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வருகை தருவதை இலகுவாக்கும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவரப்படுவதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தற்போது நடைமுறையில் உள்ள 13 பிரதான விசா வகைகளை 9 ஆகவும், 49 துணை வகைகளை 23 ஆகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்துறை அமைச்சு
மேலும், விசா விண்ணப்பங்களில் குறிப்பிட வேண்டிய தகவல்களின் அளவை 65 முதல் 70 சதவீதம் வரை குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தற்போதுள்ள சுற்றுலா விசாவுக்குப் பதிலாக புதிய வருகையாளர் விசா (Visitor Visa) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த விசாவின் ஊடாக சுற்றுலா மட்டுமன்றி, வர்த்தகப் பேச்சுவார்த்தைகள், மருத்துவ ஆலோசனைகள், நலவாழ்வு நிகழ்ச்சிகள் மற்றும் குறுகியகாலக் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் இந்தியாவிற்குச் செல்ல முடியும்.
புதிய வருகையாளர் விசா V-1 மற்றும் V-2 என இரண்டு பிரிவுகளாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மருத்துவச் சிகிச்சை
இதில் V-1 விசா 30 நாட்களுக்கும், V-2 விசா ஒன்று முதல் பத்து ஆண்டுகள் வரையிலான காலப்பகுதிக்கும் வழங்கப்படவுள்ளது.

அதேவேளை, மருத்துவ சிகிச்சைகளுக்காக வழங்கப்படும் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடமாக நீடிக்கப்படவுள்ளதுடன், ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவச் சிகிச்சைகளுக்காகவும் தனியான விசா வகை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி விசாக்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான விசாக்களிலும் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தற்போது 172 நாடுகளுக்கு வழங்கப்படும் மின்னணு விசா வசதியையும் புதிய நடைமுறைக்கு ஏற்ப மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட புதிய விசா நடைமுறையின் கீழ் விசா வழங்கும் பணிகள் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |