முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
கையூட்டல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (02) தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்தக் குற்றப்பத்திரிகை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் விதிகளின்படி வாசித்துக் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரதிவாதியான முன்னாள் அமைச்சரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிபதி அனுமதி வழங்கினார்.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
அத்துடன், இந்த வழக்கினை எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், அநுராதபுரம் மாவட்ட ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக அரசாங்கத்தின் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 36,000 கிலோகிராம் சோள விதைகளை, அப்போதைய ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் இலாபம் பெறும் நோக்கில் தனது அரசியல் ஆதரவாளர்களுக்குப் பகிர்ந்தளித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, இந்த சோள விதைகளைத் தனது ஆதரவாளர்களுக்குப் பகிர்ந்தளித்ததன் மூலம், அவர் ஊழல் குற்றத்தைப் புரிந்துள்ளதாகக் குறிப்பிட்டு கையூட்டல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |