வைத்தியர் அர்ச்சுனாவிற்கெதிரான பணிப்புறக்கணிப்பு போராட்டம்: வெளியான தகவல்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவை வெளியேற்றுமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் சில மணிநேரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று (17) காலை 08 மணி முதல் முன்னெடுக்க இருந்த பணிப்புறக்கணிப்பை சில மணி நேரங்களுக்கு பிற்போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றகோரி இன்றைய தினம் காலை 08 மணி முதல் பணிப்புறக்கணி்ப்பை முன்னெடுக்கவுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்றைய தினம் (16) அறிவித்திருந்தது.
தடை உத்தரவு
இந்தநிலையில், தமது பணிப்புறக்கணிப்பை கைவிட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடி, நகர்த்தல் பத்திரம் மூலம் வைத்தியர் அர்ச்சுனாவை விடுதியில் இருந்து வெளியேற்றக் கோரி கட்டளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக 05 வழக்குகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சரி நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து நடைபெற்ற விசாரணைகளின் பின்னர், வைத்தியரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நடவடிக்கைகளில் ஈடுபட நீதிமன்றம் தடை விதித்ததோடு, அவரை 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தலா 5 சரீரப் பிணைகளில் விடுவித்தது.
அத்துடன் வைத்திய சாலையின் சுமூகமான செயற்பாட்டிற்காக, வைத்தியர் அர்ச்சனாவை வைத்தியசாலையின் நிர்வாக செயல்பாடுகளில் தலையிடவும், வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் வைத்தியசாலையின் விடுதிக்குள் தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கினர்.
இந்தநிலையில், குறித்த விடயத்தில் சாவகச்சேரி வைத்தியசாலை விடுதி வைத்தியசாலை வளாகத்திற்கு உள்ளே அமைந்துள்ளது என்ற காரணத்தை குறிப்பிட்டு வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடிவு எட்டப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு போராட்டம்
இதன் காரணமாக காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நான்கு மணி நேரத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் ஊடாக சாதகமான முடிவுகள் கிடைக்கபெறாதவிடத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கிளையினர் மீண்டும் இன்று மதியம் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண ( (Ramesh Pathirana) மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |