புதைகுழிகள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துங்கள் : அநுர அரசுக்கு சுமந்திரன் அழுத்தம்
உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது.
எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை இன்றைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ, சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு சுமந்திரன் கருத்து தெரிவிக்கும் போது,
உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்
இங்கு நடைபெறும் அகழ்வு பணிகளில் குழந்தைகள் , வயது குறைந்தவர்களின் எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. எலும்பு கூடுகள் அசாதாரணமாக சூழலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.
சில இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையில் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் , அவை தொடர்பில் ஆய்வு செய்யக் கூடிய பொறிமுறைகள் இலங்கையில் இன்னமும் இல்லாத நிலைமைகள் காணப்படுகின்றன எனவே சர்வதேச நிபுணத்துவ உதவிகளை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டும்.
உண்மைகளை மறைத்து நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது
மனித புதைகுழிகள் கொக்குத்தொடுவாய் , மன்னார் , மாத்தளை , போன்று தெற்கிலும் அகழ்ந்து எடுக்கப்படும் எலும்புக்கூடுகளை முறையாக பாதுகாப்பதற்கு கூட சர்வதேச நிபுணத்துவ மேற்பார்வை வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதாக கூறுகிறது. உண்மைகளை மறைத்து நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை கண்டறிய சர்வதேச நிபுணர்களை நாட்டுக்கு அழைத்து , அவர்களிடம் புதைகுழி விவகாரங்களை கையளித்து , எவ்வித தலையீடுகளும் இன்றி அவர்கள் சுயாதீனமாக செயற்பட்டு அது தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா
