தண்ணீர்வாளியில் தவறி விழுந்து ஒருவயது குழந்தை பரிதாப மரணம்
20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏறாவூர் தன்னாமுனை கிறிஸ்துவின் நிழல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயதும் 2 மாதங்களை கொண்ட அக்விவ் விகான் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
நீர் நிறைந்த வாளிக்குள் குப்பற வீழ்ந்து கிடந்த குழந்தை
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான இன்று பகல் 11.00 மணியளவில் குழந்தை நித்திரையில் இருந்த போது தாயார் கிணற்றடியில் 20 லீற்றர் கொண்ட சுவர் பூச்சு (பெயின்) வாளியில் உடைகளை கழுவிக் கொடியில் காய விரித்துக் கொண்டிருந்தார்.

இதன்போது நித்திரையில் இருந்து எழுந்து அங்கு குழந்தை வந்ததை அடுத்து அவரை குளிப்பாட்டுவதற்காக குழந்தையின் ஆடைகளை எடுப்பதற்கு வீட்டின் அறைக்கு சென்று திரும்பிய போது குழந்தை அந்த நீர் நிறைந்த வாளிக்குள் குப்பற வீழ்ந்து கிடப்பதை கண்டுள்ளார்.
மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதி
குழந்தையை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததையடுத்து சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு குழந்தையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |