நெருப்புடன் விளையாடாதீர்! பகிரங்கமாக எச்சரித்தது சீனா
தாய்வான் மற்றும் ஹொங்கொங் பிரச்சினை, ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் போன்ற விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தாய்வான் விவகாரத்தில் தலையிடுவதை சுட்டிக்காட்டி நெருப்புடன் விளையாட வேண்டாம் என அமெரிக்காவுக்கு சீன வெளியுறவு மந்திரி வாங் யி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தாய்வான் விவகாரத்தை துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு சீனாவுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம். இதனை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும். சீனக் கொள்கையை அமெரிக்கா கட்டாயம் மதிக்க வேண்டும்.
ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்களை இனப்படுகொலை எனக் கூறும் அமெரிக்காவின் கூற்றை சீனா ஒருபோதும் ஏற்காது. இது அரசியல் நோக்கங்களுக்காக புனையப்பட்ட பாரிய பொய்யாகும்.
அதேபோல் ஹொங்கொங் விவகாரத்தில் தலையிடுவதையும் அமெரிக்கா நிறுத்திக் கொள்ளவேண்டும். ஒரு நாடு இரண்டு அமைப்புகள் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தும் சீன அரசாங்கத்தின் முயற்சிகளை அமெரிக்கா மதிக்க வேண்டும்.
இப்படி பல்வேறு விவகாரங்களில் சீனா மீது வைத்துள்ள தவறான புரிதல்களை சமாளிக்க அமெரிக்கா இன்னும் சரியான வழியைக் கண்டு பிடிக்காததால் தான் இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தொடர்கின்றன அவர் மேலும் கூறியுள்ளார்.