ஹவுதிகளை முதல் முறையாக தொடர்பு கொண்ட சீனா! கசிந்துள்ள முக்கிய தகவல்
தெற்கு செங்கடல் வழியாகத் தங்கள் எண்ணெய்க் கப்பல்கள் எவ்விதத் தாக்குதலுமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதற்காகச் சீனா, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி அரேபியத் துறைமுகங்களுக்கான போக்குவரத்தைத் தடுப்பதாக கடந்த 20 ஆம் திகதி ஹவுதி அமைப்பினர் அறிவித்ததைத் தொடர்ந்து, தங்கள் எண்ணெய்க் கப்பல்கள் எவ்விதத் தாக்குதலுமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதற்காக சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது, சீனா தனது எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பயணப் பாதையை உறுதி செய்யுமாறு ஹவுதிகளிடம் நேரடியாகக் கோரியுள்ளதாக தெரியவருகிறது.
சீனாவின் முயற்சி
இந்த நிலையில், செங்கடலின் தெற்கு முனையில் ஏமனின் கிழக்குக் கரையை ஒட்டியுள்ள பாப் அல்-மண்டேப் நீர்வழிப்பாதை வழியாகப் பயணிப்பது குறித்து ஹவுதிகளை நேரடியாகத் தொடர்பு கொண்ட முதல் நாடு சீனா என கூறப்படுகிறது.

வளைகுடாவிலிருந்து வெளியேறும் வழியிலுள்ள ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் ஏற்பட்ட விநியோகப் பற்றாக்குறையை நிரப்பும் வகையில், சவூதி அரேபியாவின் செங்கடல் முனையங்களிலிருந்து, குறிப்பாய் யான்பு துறைமுகத்திலிருந்து எண்ணெய் ஏற்றுமதியைத் தொடர்ந்து பெறச் செய்ய சீனா முயன்று வருகிறது.
இருப்பினும் இது குறித்துச் சீனப் போக்குவரத்து அமைச்சு, ஹவுதிகளின் ஊடக அலுவலகம் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சு ஆகியவை இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |