சீனாவை அடுத்து ரஷ்யாவை கோபப்படுத்தும் அரசாங்கம் - விமல் வீரவன்ச குற்றச்சாட்டு
சீனாவை தொடர்ந்து ரஷ்யாவையும்
தற்போதைய அரசாங்கம் சீனாவை முன்னர் கோபப்படுத்தியதாகவும் தற்போது ரஷ்யாவை கோபப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“ரணில் விக்கிரமசிங்க திரும்பி வந்தால் உலக நாடுகள் வரிசையில் வந்து உதவும் என்று சிலர் சொன்னார்கள். ஆனால், எதிர்வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஏற்படப்போகும் பெரும் பஞ்சத்தால் ஏற்படும் பாதிப்புகளை எப்படிக் குறைப்பது என்பது குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.
எரிவாயு இல்லாமல் நகர்ப்புற மக்கள் மட்டுமன்றி கிராமப்புற மக்களும் பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நட்பு நாடுகளுடன் எந்த விவாதமும் நடப்பதாகத் தெரியவில்லை. மாறாக நட்பு நாடுகளையும் கோபப்படுத்தும் திசைக்கு இந்த நாட்டை இழுத்துச் செல்வதே நடந்துள்ளது.
நண்பர்களாக இருந்த நாடுகள்
சர்வதேச அரங்கில் இலங்கை எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடியிலும் குறிப்பாக பொருளாதார நெருக்கடியான காலங்களில் நேர்மையான நண்பர்களாக இருந்த நாடுகள் சீனாவும் ரஷ்யாவும். இந்த அரசாங்கம் சீனாவை முன்கூட்டியே கோபப்படுத்தியது. இன்று கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட நீதித்துறை தலையீட்டின் பிரகாரம் ரஷ்யாவையும் கோபப்படுத்தும் நிலைக்கு நாடு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உலகில் தேயிலை உற்பத்தியில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வரவில்லை என்றால், எந்த அந்நியச் செலாவணியும் நாட்டிற்குள் நுழைய வழியே இருக்காது. பல நாடுகள் பயணத் தடை விதித்துள்ளன.
சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நாடு, தேநீர் வாங்கும் நாடு நமக்கு அடுத்தபடியாக உள்ளது அதனை கோபப்படுத்தும் செயற்பாடே முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
