நெருப்புடன் விளையாடவேண்டாம் -பைடனை கடுமையாக எச்சரித்த சீன அதிபர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping)இடையே நடைபெற்ற சந்திப்பின்போது நெருப்புடன் விளையாடக்கூடாது என அமெரிக்காவுக்கு ஜின் பிங் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் காணொளி வாயிலாக சந்தித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் சூழலில் கடந்த திங்கள்கிழமை நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது வர்த்தகம், மனித உரிமை, தாய்வான் பிரச்சனை, கொரோனா பெருந்தொற்று மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டன.இதில் தாய்வான் குறித்து பேசியபோது, விவாதம் கோபப்பெருக்காக மாறியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் மரியாதைக்குரிய வெளிப்படையான சந்திப்பாக அமைந்தது என்று கூறப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கிடையே நிலவும் போட்டி நேரடியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும், மோதல் போக்கை அமெரிக்கா விரும்பவில்லை என்று பைடன் வலியுறுத்தினார்.
சீன அதிபர் பேசுகையில் தன்னுடய பழைய நண்பர் ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தாய்வான் மீதான சீனாவின் ஆதிக்கம் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் குலைக்கச் செய்யும் நடவடிக்கையாகவும் அதனால் அதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு எதிர்வினையாற்றிய ஜி ஜின்பிங் தாய்வானின் சுதந்திரமான போக்கிற்கு ஆதரவளிக்க கூடாது என்றும் ‘நெருப்புடன் விளையாடக் கூடாது’ என்றும் ஜோ பைடனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு முன்னதாகவும் தாய்வானுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று பைடன் வெளிப்படையாக அறிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் சீனாவின் ஜின்ஜிங்காங், திபெத் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஜோ பைடன் பேசினார். அதற்கு பதிலளித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்நாட்டு விவகாரங்களில் வெளியிலிருந்து வரும் தலையீடுகளை சீனா விரும்புவதில்லை என விளக்கமளித்தார்.