சீனாவின் திட்டமிடல் - மகிந்தவை பிரதமராக்குவதில் கவனம்..!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்து வருவதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய இம்மாதம் உத்தியோகபூர்வமாக இடம்பெற்ற சந்திப்பில் போருக்குப் பின்னரான மறுசீரமைப்பு, கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டம் போன்ற அனைத்து முக்கியமான தருணங்களிலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் இலங்கைக்கு மிகவும் மதிப்புமிக்க உதவிகளைத் தொடர்ந்து வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்திருந்தார்.
அத்தோடு குறித்த சந்திப்பில் போது இரு நாடுகளுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பை ஆழமாக்குதல் பல்வேறு துறைகளில் பரிமாற்றங்கள், ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பொதுவான நலன்கள் தொடர்பான மற்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சீன இந்த சந்திப்பின் பின்னர் தெரிவித்திருந்தது.
சீனத் தூதுவர்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தீவிர அரசியல் செயற்பாட்டைத் ஆரம்பித்ததன் பின்னர் அவரது வீட்டுக்கு அடிக்கடி பல முக்கிய பிரமுகர்கள் சென்று பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றனர்.
அவர்களுள் முக்கியமான வெளிநாட்டுத் தூதுவர் ஒருவரும் அடங்குகின்றார். அவர்தான் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங்.
மஹிந்தவின் விஜேராம வீட்டுக்குச் சென்று மஹிந்தவுடன் நீண்டநேரம் உரையாடி செல்வதாக அரசியல் வட்டாரங்களில் கருத்தொன்று முன்வைக்கப்படுகிறது.
மீண்டும் சீனா
நாட்டின் அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்து வரும் நிலையில் முன்னாள் பிரதமரை சென்று சந்திப்பதன் நோக்கம் தற்போது ஒரு சர்ச்சையை தோற்றுவிக்கும் விடயமாக மாறியுள்ளது.
நாட்டிற்க்கான முக்கிய பிரமுகர்கள் முன்னாள் பிரதமரை சந்திப்பது சாதாரண விடயம் என்றாலும், சீன தூதுவர் சந்திப்பானது சிறிலங்காவின் எதிர்கால அரசியலை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமிடலா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இவ்வாறிருக்க மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவதில் சீனா மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது என அண்மையில் பலதரப்புகளில் இருந்து செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
